சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு!… பக்தர்கள் வருகை அதிகரித்தையடுத்து ஏற்பாடு!
பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதையடுத்து சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திறண்ட வண்ணம் உள்ளனர். அதோடு, ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வரும் நிலையில், உடனடி முன்பதிவு மையங்களிலும் ஏராளமானோர் பதிவு செய்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 17 மணி நேரம் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதாவது அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் நடை மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும்.
பின்னர் மீண்டும் மதியம் 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு அடைக்கப்படும். இருந்த போதிலும் பக்தர்கள் 10 முதல் 14 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 தினங்களாக நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஐயப்பன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். தொடர்ந்து டிசம்பர் 27-ம் தேதி சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். பின்னர் மீண்டும் 30-ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2024-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி நடை அடைக்கப்படும். மேலும் 2024-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
இந்த நிலையில் இருமுடி கட்டி வரும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அதிக அளவு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தரிசன நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதியம் 4 மணி முதல் இரவு 11 மணி வரை நடை திறந்திருக்கும் நிலையில், மதியம் 3 மணி முதல் நடை திறக்கலாம் என தந்திரி கண்டரரரு ராஜீவரு, தேவசம் போர்டு ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.