முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Farmers: விவசாய பயிர் பாதிப்பு...! திமுக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய கோரிக்கை...!

12:58 PM Feb 25, 2024 IST | 1newsnationuser2
Advertisement

வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் கொட்டித்தீர்த்த பெருமழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ரூ.160 கோடி நிவாரணம் வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் ஒப்பிடும் போது, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இழப்பீடு போதுமானதல்ல. அதுமட்டுமின்றி, வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை மற்றும் சம்பா பயிர்களுக்கு இழப்பீடு வழங்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தென் மாவட்டங்களில் 2023 திசம்பர் மாத இறுதியில் பெய்த மழையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிகக்கடுமையான அளவிலும், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவிலும் நெற்பயிர்கள் பாதிக்கப் பட்டன. ஒட்டுமொத்தமாக 12 லட்சம் ஹெக்டேருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஆனால், அவற்றில் ஒரு லட்சத்து 64,866 ஹெக்டேர், அதாவது 4 லட்சத்து 12,165 ஏக்கர் பரப்பளவிலான பயிர் சேதங்களுக்கு மட்டும் தான் தமிழக அரசு நிவாரணம் வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையும் போதுமானதல்ல. மொத்தம் 4 லட்சத்து 12,165 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில், அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.160.42 கோடி மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ.3892 மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.25,000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் ஆறில் ஒரு பங்குக்கும் குறைவானத் தொகையை தமிழக அரசு இழப்பீடாக வழங்குவது எந்த வகையில் நியாயம்..?

அதேபோல், வறட்சியால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான குறுவை பயிர்களுக்கும், முழுமையான சம்பா பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படாதது தமிழக உழவர்களிடம் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. குறுவை பருவத்தில் 2 லட்சம் ஏக்கரில் முழுமையாகவும், 1.5 லட்சம் ஏக்கரில் ஓரளவுக்கும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வெறும் 40000 ஏக்கரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மட்டும் தான் ஏக்கருக்கு ரூ.5400 என்ற அளவில் தான் அரசு இழப்பீடு வழங்கியது. இது எந்த வகையிலும் போதுமானதல்ல.

வார்த்தைக்கு வார்த்தை உழவர்களின் நலன்களை பாதுகாப்பதாகக் கூறிக் கொள்ளும் திமுக அரசு, குறுவை மற்றும் சம்பா பருவத்தில் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்க மறுப்பது நியாயமல்ல. உழவர்களின் துயரத்தை உணர்ந்து கொண்டு தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் முழுமைக்கும் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தின் பிற பகுதிகளில் சம்பா பருவத்தில் வறட்சியால் ஏற்பட்ட விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல், குறுவை பருவத்தில் முழுமையாக கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதமும், ஓரளவு கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

English Summary : Damage to agricultural crops... should be provided at the rate of Rs.40,000 per acre

Advertisement
Next Article