Cyclone Alert: மத்திய வங்கக் கடலில் உருவானது 'ரெமல்' புயல்...!
மத்திய வங்கக் கடலில் உருவானது 'ரெமல்' புயல். இன்று நள்ளிரவு, இது தீவிர புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு, இது தீவிர புயலாக மாறி சாகர் தீவு மற்றும் கேப்புப்பாரா இடையே பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதியையொட்டி கரையைக் கடக்கக் கூடும். புயல் கரையை கடக்கும் பொழுது மணிக்கு 120 கி.மீ., முதல் 135 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். மாவட்ட கட்டுப்பாட்டு அறைகள் நிலைமையைக் கண்காணித்து வருகிறது. போதிய அளவு தங்குமிடங்கள், மின் விநியோகம், மருந்துப் பொருட்கள், அவசரகால சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஹால்டியா, பாராதீப், கோபால்பூர் மற்றும் பிரேசர்கஞ்ச் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒன்பது பேரிடர் நிவாரணக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவசரநிலை ஏற்பட்டால் இந்தக் குழுக்கள் உடனடி உதவிகளை வழங்கத் தயாராக உள்ளன.
சம்பந்தப்பட்ட துறைமுக அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள போதிலும், தற்போதைய நிலைமை குறித்து அந்தந்த பகுதிகளில் உள்ள நாட்டுப் படகு மீனவர்களுக்கு மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.