மத்திய அரசிடம் 5000 கோடி நிதி உதவி.! மிக் ஜாம் புயல் நிவாரணப் பணிகளில் முதலமைச்சர் தீவிரம்.!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. நேற்று இந்த புயல் கரையை கடந்துள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரம் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 74 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெருமழை சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு இருக்கிறது.
இந்தப் புயல் மற்றும் மழை வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப நிவாரண பணிகள் முழு அளவில் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. தல தமிழக அரசின் அமைச்சர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் முழு வீச்சில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும் தூய்மை பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நிவாரண பணிகளை மேலும் துரிதப்படுத்தவும் நகரை சீரமைப்பதற்கும் மத்திய அரசிடம் இருந்து 5000 கோடி நிதி உதவி கேட்க இருப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதி உதவிகளை பொறுத்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்தியாவிலேயே அதிக ஜிஎஸ்டி வரி வழங்கும் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் மத்திய அரசு நிதி பங்கீடு செய்வதில் தமிழகத்திற்கு பாரபட்சமாக நடந்து கொள்வதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.