தமிழ்நாட்டை புரட்டிப் போட்ட ஃபெஞ்சல் புயல்..!! தீவிர பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!
தமிழ்நாட்டில் கடந்த 2024 நவம்பர் மாத இறுதியில் ஃபெஞ்சல் புயல் உருவானது. இந்த புயல் கரையை கடந்தபோது விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டிப் போட்டது. இந்த புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஃபெஞ்சல் புயல் பாதிப்பில் இருந்து இன்று வரை மக்கள் மீளாமல் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இதனை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் அதற்கான பேரிடர் தொகையை விடுக்க கோரியும் மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை பேரிடராக அறிவிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. மேலும், பேரிடர் நிதியாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் வழக்கமான தொகையை மட்டும் விடுவித்திருந்தது.
இதற்கு திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை தீவிர பேரிடராக தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்திற்கு உட்பட்ட பேரிடர் நிதி மட்டுமின்றி இதர நிதிகளையும் பேரிடர் கால சீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30ஆம் தேதி கரையை கடந்தது. அப்போது, பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகள், விவசாய நிலங்கள் மிக மோசமாக சேதமடைந்தது. இந்த புயல், வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.