ஷாக்...! ரூ.150 வரை சுங்க கட்டண உயர்வு... தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது...!
தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே 67 சுங்கச்சாவடிகளும், மாநில நெடுஞ்சாலைகளில் 7 சுங்கச்சாவடிகளும் உள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் 62 சுங்கச்சாவடிகளில் 34 சுங்கச்சாவடிகளில், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பிறகு கடந்த ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வந்தது என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 7% வரை உயர்த்தப்பட்டது. வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது.