தூள்...! வங்கி கணக்கில் அதிகபட்சம் 4 நாமினி நியமிக்க வாடிக்கையாளருக்கு அனுமதி...!
வங்கிக் கணக்கில் சட்டப்பூர்வ வாரிசு பயனாளிகளைச் சேர்ப்பது உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை செய்ய மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஒரு வங்கிக் கணக்கில் அதிகபட்சம் நான்கு நாமினிகளை நியமிக்க வாடிக்கையாளருக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
வங்கிகளின் சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்பு கணக்கில் ஒரு நாமினி மட்டுமே நியமிக்க முடியும். புதிய மசோதாவின்படி ஒரு வங்கி கணக்குக்கு 4 நாமினிகளை நியமித்து கொள்ள முடியும். தற்போதைய நடைமுறைகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை வங்கிகள் சிறப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது வாரத்தின் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். புதிய சட்ட திருத்த மசோதாவின்படி ஒரு மாதத்தில் 15-ம் தேதி மற்றும் 30-ம் தேதிகளில் வங்கிகள் சிறப்பு அறிக்கையை தாக்கல் செய்யலாம்.
புதிய மசோதாவில் கூட்டுறவு வங்கிகளில் இயக்குநர்களின் பதவிக் காலம் 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒன்று அல்லது 2 கூட்டுறவு வங்கிகளுக்காக சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை. நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை கருத்தில் கொண்டே திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு நீதிமன்றங்களின் தீர்ப்புகள் கவனத்தில் கொள்ளப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.