ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்பக் கோரி இந்தியாவுக்கு பங்களாதேஷ் கடிதம்..!!
வங்கதேசத்தில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா பாதுகாப்பு கேட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதைத் தொடர்ந்து இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டின் கீழ் ஹசீனா உட்பட 9 பேர் மீது வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த மாதம் விசாரணையை தொடங்கியது.
இந்த நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவிற்கு திருப்பி அனுப்ப இந்தியாவுக்கு தூதரகக் குறிப்பை அனுப்பியுள்ளதாக வங்காளதேச இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சர் தௌஹீத் ஹுசைன் கூறுகையில், "நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு தூதரக செய்தியை அனுப்பியுள்ளோம், அதில் ஹசீனா வங்காளதேசத்தில் நீதித்துறை செயல்முறைக்காக டாக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது" என்றார்.
முன்னதாக, பங்களாதேஷ் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஜஹாங்கீர் ஆலம், ஹசீனாவை நாடு கடத்துமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு தனது அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 77 வயதான ஹசீனா, தனது 16 ஆண்டுகால ஆட்சியை கவிழ்த்த மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய ஆகஸ்ட் 5 முதல் இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; Breaking | 5 முதல் 8 வகுப்பு வரை மாணவர்களின் கட்டாய தேர்ச்சி ரத்து..!! – மத்திய அரசு அறிவிப்பு