புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களில் விரிசலா..? அலட்சியம் வேண்டாம்..!! உடனே இதை பண்ணுங்க..!!
புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் ஏற்படும் மெல்லிய விரிசல்கள் உரிமையாளர்களுக்கு பல்வேறு வகையான குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கட்டடங்களில் பூச்சு வேலையில் ஏற்படும் சில குறைபாடுகளால் மேல்பரப்பில் மெல்லிய விரிசல்கள் ஏற்படுகின்றன. இதே போன்று கான்கிரீட் கட்டடங்களில் கட்டுமான பணிகள் முடிந்தால் போதும் என்று ஒதுங்காமல், அதில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு நீராற்ற வேண்டும். கான்கிரீட் கட்டடங்களில் எந்த அளவுக்கு முறையாக நீராற்றும் பணிகள் நடக்கிறதோ அந்த அளவுக்கு விரிசல்களை தடுக்கலாம்.
இதில் விரைவில் உலரும் தன்மைக்காக ரசாயனங்கள் கலந்த கான்கிரீட்டை பயன்படுத்தும் இடத்தில் பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் நீராற்ற வேண்டியது அவசியம். இது போன்ற நிலையில் கட்டுமானத்தின் மேல் பாத்தி கட்டி தண்ணீர் ஊற்ற வேண்டியிருக்கும். ஆனால், சிறப்பு வகை ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட கான்கிரீட் கட்டுமானங்களில் மேலோட்டமாக தண்ணீர் தெளித்தால் போதும். சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, கட்டுமான பணியாளர்கள் முந்தைய நாள் உருவான கட்டுமானங்களில் தண்ணீர் ஊற்ற தவறுகின்றனர்.
பொறியாளர், உரிமையாளர் விசாரிக்கும் போது, தண்ணீர் ஊற்றியதாக பொய் சொல்லி தப்பித்து விடுகின்றனர். இப்படியான சூழலில் கட்டடம் கட்டப்பட்ட சில வாரங்களிலேயே அதன் மேற்பரப்பில் மெல்லிய விரிசல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக அதிக வெயில் நிலவும் சமயத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளிலும் விரிசல் போன்ற பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புள்ளன.
சமீப காலமாக ஆற்று மணலுக்கு பதிலாக எம்-சாண்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், கான்கிரீட் கட்டுமானத்தின் மேற்பரப்பு வண்ணம் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இது போன்ற வித்தியாச நிலையில், மேற்பரப்பில் ஏற்படும் மெல்லிய விரிசல்கள் உரிமையாளர்களுக்கு பீதியை ஏற்படுத்தும். உங்கள் வீட்டு கட்டடத்தில் இது போன்ற மெல்லிய விரிசல்கள் ஏற்பட்டால் அலட்சியமாக நினைத்து இருந்துவிடாதீர்கள். கட்டுமான பொறியாளர் அல்லது அனுபவம் உள்ள உங்களுக்கு நம்பகமான பணியாளரை அழைத்து இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற விரிசல்கள் ஏற்பட்ட இடங்களில் சிமெண்ட் கலவையுடன், 'எக்ஸ்பேன்சன் பில்லர் கெமிக்கல் பவுடர்' கலந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம். ஒருமுறை இந்த பவுடரை பூசிய பின் ஒரு வாரம் கழித்து கட்டுமானத்தின் தேவையை அறிந்து மீண்டும் பூச வேண்டும். இதில், 'கியூரிங் காம்பவுண்ட் கோட்டிங், கிராக்கிங் பில்லிங் காம்பவுண்ட்' போன்ற ரசாயன கலவைகளை சிவில் பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் பயன்படுத்தலாம்.