Election Breaking | மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன் அமோக வெற்றி..!!
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.பி. சு. வெங்கடேசன், 1,76, 536 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மீதமுள்ள 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி, I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பிறக்கட்சியைச் சேர்ந்தவர்கள் களம் கண்டனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணியானது தொடங்கியது. 2024 மக்களவை தேர்தலில் மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிட்டிங் எம்.பி. சு. வெங்கடேசன், அதிமுக தரப்பில் பி. சரவணன், பா.ஜ.க. தரப்பில் ராம சீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் மோ. சத்யா தேவி உள்ளிட்ட பலர் களத்தில் உள்ளனர்.
பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை இந்தத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் இவர் ஆவார். தற்போது மதுரையில் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1,76, 536 வாக்குகள் வித்தியாசத்தில் எதிரணி வேட்பாளர்களை வீழ்த்தியுள்ளார்.