தம்பதிகளே..!! பாலியல் உறவு திருப்தியாக இல்லையா..? இந்த புதிய முயற்சியை டிரை பண்ணி பாருங்க..!!
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும், திருப்தியானதாகவும் இருக்க வேண்டும் என்றால் பாலியல் ரீதியிலான நெருக்கம் மிக மிக அவசியம். அது இல்லாமல் திருமண வாழ்க்கை முழுமை அடையாது. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே மன ரீதியாவும், உடல் ரீதியாகவும் மிக ஆழமான புரிந்துணர்வு ஏற்பட பாலியல் உறவு வழிவகை செய்கிறது. இருப்பினும் பழகப் பழக பாலும் புளிக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப நாளடைவில் பாலியல் உறவு மீதான நாட்டம் தம்பதியினருக்கு குறைந்து விடுகிறது.
இதனால் திருமண வாழ்க்கை சலித்துப் போகிறது. மேலும், ஒரு திருப்தியற்ற மனநிலையும் உருவாகிறது. ஆனால், கிணற்றில் இரைக்க, இரைக்க ஒவ்வொரு நாளும் தண்ணீர் ஊற்றெடுப்பதைப் போல, நம்முடைய தாம்பத்ய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கும் பல வழிமுறைகள் இருக்கின்றன. வழக்கமான பாலியல் இணைப்பைக் காட்டிலும் நகைச்சுவை பரிமாற்றம், காதல் உணர்வை தூண்டுகின்ற பாடல்கள், பாலியல் உறவுக்கு துணை நிற்கும் பொம்மைகளின் பயன்பாடு போன்றவை நம் வாழ்க்கையில் புதுமை மற்றும் குதூகல உணர்வை தரும்.
மனம் விட்டு பேசுங்கள்:
ஆண், பெண் இடையேயான பந்தம் ஆரோக்கியமாக அமைய வேண்டுமென்றால், வெளிப்படையான பேச்சு மிக அவசியம் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலும் பாலியல் தொடர்பான விஷயங்களை விவாதிக்க தயக்கம் காட்டவே கூடாது. பாலியல் நடவடிக்கைகளை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்று உங்கள் பார்ட்னருடன் நீங்கள் உரையாடும்போது உங்கள் எல்லைகள் விரிவடையும் மற்றும் புதுப்புது சிந்தனைகள் மேலோங்கும்.
புதிய முயற்சிகள்:
சாதாரணமாக நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடையில் கூட ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தேர்வுகளை பயன்படுத்துகின்றோம். புதிதாக ஒன்றை முயற்சிக்கிறோம். அப்படி இருக்கையில், பாலியல் உறவு என்று வரும்போது ஒரே வழிமுறையை கடைப்பிடித்தால் சலிப்பு ஏற்படக் கூடும். ஆகவே, புதுப்புது உத்திகளை முயற்சி செய்யலாம்.
சரியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்:
பாலியல் தூண்டுதலை ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையை நாமே உருவாக்க வேண்டும். மின் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி ஏற்றலாம். மெல்லிய அல்லது மனதுக்கு பிடித்தமான இசையை ஒலிக்க விடலாம். உணர்வுகளை தூண்டும் வகையிலான படங்களை பார்க்கலாம் அல்லது கதைகளை படிக்கலாம். படுக்கை அறையை விருப்பம் போல அலங்கரித்துக் கொள்ளலாம்.
நேரம் ஒதுக்க வேண்டும்:
அலுவலக வேலை, வீட்டு வேலை, குடும்ப பொறுப்புகள் என்று நீங்கள் ஓடிக் கொண்டே இருந்தாலும், அதற்கு இடையே இணக்கமான உறவுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும். மற்ற அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பாலியல் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். குறிப்பாக வெளியுலக தொடர்பை சிறிது நேரம் துண்டிக்க வேண்டும்.
மெதுவாக தொடங்க வேண்டும்:
எதையும் அவசர கதியில் மேற்கொள்ள கூடாது. குறிப்பாக அன்பும், அரவணைப்பும் துரித கதியில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அல்ல. எந்த அளவுக்கு நிதானத்துடன் இதை முன்னெடுத்துச் செல்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்குள் புரிந்துணர்வு ஏற்படும் மற்றும் பந்தம் பலப்படும்.