கள்ளச்சாராய மரணம்..!! உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் எதற்கு..? சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது..? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் இழப்பீடுத் தொகை ரூ.10 லட்சம் என்பது அதிகம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இழப்பீட்டுத் தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை எதிர்த்து முகமது கோஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கடந்த 18ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சாராயம் குடித்தவா்களில் சிலர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் 10-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. மேலும், இந்த சம்பவத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் கூடுதல் நிவாரணங்களையும் அறிவித்திருந்தது. கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பாக விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அமைப்புகள் சார்பில் கண்டனங்களும் பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டன. இந்நிலையில்தான், இழப்பீடு தொகை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை தொடங்கியிருக்கிறது.
Read More : மருமகனுடன் உல்லாசம்..!! ஆபாச வீடியோவை காட்டி மிரட்டிய முன்னாள் காதலன்..!! கோபத்தில் பெண் செய்த சம்பவம்..!!