”என் புருஷனுக்கு அவ கூட தொடர்பு இருக்குமோ”..? சந்தேகத்தில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொடூர கொலை..!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!
நாகை மாவட்டம் மேலகோட்டைவாசல் நடராஜர் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கார்த்தீசன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவருக்குத் திருமணமாகி வள்ளி என்ற மனைவி உள்ள நிலையில், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் பழகி வருவதாக மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதில், கார்த்திசனின் நண்பர் காளியப்பனின் மனைவி சுகன்யா மீதும் வள்ளிக்கு சந்தேகம் வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த வள்ளி தனது கனவனையும், சுகன்யாவையும் பழிவாங்கத் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த 2016ஆம் ஆண்டு காளியப்பனின் வீட்டிற்குச் சென்ற அவர், இதுகுறித்து சுகன்யாவுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கிடையே தகராறு முற்றியது. இதில், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற வள்ளி சுகன்யாவின் மீது கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து ஊற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுகன்யா நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சுகன்யாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சுகன்யாவிடம் நாகை மாஜிஸ்ட்ரேட் மரண வாக்குமூலம் பெற்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுகன்யாவின் கணவர் காளியப்பன் அளித்த புகாரின் பேரில், நாகை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கு நாகப்பட்டினம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், போக்சோ நீதிமன்ற நீதிபதி கார்த்திகா இன்று தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில், வள்ளி குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராதத் தொகையை செலுத்த தவறினால், மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்தார்.