இலவச வேஷ்டியில் ஊழல்.! திமுக அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்.! பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு.!
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார். சமீபத்தில் திமுக அரசின் ஊழல் தொடர்பாக டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் சில ஆவணங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும் அவர் தொடர்ந்து அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட இலவச வேஷ்டியில் ஊழல் நடந்திருப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபய்குமாருக்கு ஒரு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அந்தக் கடிதத்தில் இலவச வேஷ்டி வழங்குவதில் 60 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்த அவர் கைத்தறித்துறை மற்றும் அமைச்சர் ஆர்.காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக தனது புகார் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கும் அண்ணாமலை தமிழக அரசு இலவச வேஷ்டி கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார். மேலும் வேஷ்டி தயாரிப்பதற்கு தரம் குறைந்த பாலிஸ்டர் நூலை பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். பொதுவாக வேஷ்டிகளில் பருத்தி நூல் பயன்படுத்தப்படும் ஆனால் தமிழக அரசு வழங்கிய இலவச வேஷ்டியில் பெரும்பாலும் பாலிஸ்டர் நூல் பயன்படுத்திருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதன்படி 60 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்திருக்கும் அவர் இது சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்பு துறையை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இலவச சேலை திட்டத்தில் எவ்வளவு ஊழல் நடந்தது என்று தெரியவில்லை எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு தொடர்ந்து ஊழல்களில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.