மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா..!! அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி..!!
அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான சிவி சண்முகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், ஒட்டு மொத்த உலகையும் ஆட்டம் காண செய்தது. கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடின. கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு, சற்று ஓயத்தொடங்கியது. இந்நிலையில் மீண்டும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் மாதிரியை பரிசோதனை செய்தபோது அது 'ஜே.என்.- 1' என்ற உறுமாறிய புதுவகை கொரோனா என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் தற்போது தமிழ்நாட்டிலும் கடந்த 2 வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் ஓரிரு நபர்களுக்கு மட்டுமே தொற்று பதிவாகி இருந்த நிலையில், கிடுகிடுவென உயர்ந்து 104 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.