கோபா அமெரிக்கா!. காலியிறுதிக்கு முன்னேறிய பிரேசில்!. வெற்றிபெற்றும் வெளியேறியது கோஸ்ட்டா ரிக்கா!
Copa America: நேற்றைய கோபா கால்பந்து தொடரில் பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், வெற்றிபெற்றும் கோஸ்ட்டா ரிக்கா அணி வெளியேறியது.
அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடைபெற்று வருகிறது. இதன் 'டி' பிரிவில் கடைசி லீக் போட்டிகள் நேற்று நடந்தன. உலகத் தரவரிசையில் 4வதாக உள்ள பிரேசில் அணி, 12வது இடத்திலுள்ள கொலம்பியாவை சந்தித்தது. போட்டியின் 12வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு 'பிரீ கிக்' வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பில் ராபினா, பந்தை துல்லியமாக அடித்து கோலாக மாற்றினார். முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் (45 2வது நிமிடம்), கொலம்பிய வீரர் கோர்டோபா பந்தை, சக வீரர் டேனியல் முனோசிற்கு 'பாஸ்' செய்தார்.
இதை வாங்கிய டேனியல், பந்தை வலது காலால் உதைத்து வலைக்குள் தள்ளி கோல் அடித்தார். முதல் பாதியில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தனர். இரண்டாவது பாதியில் கோல் அடித்து வெற்றி பெற இரு அணிகளும் போராடின. யாரும் கோல் அடிக்கவில்லை. முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் கோஸ்டாரிகா, பராகுவே அணிகள் மோதின. இதில் கோஸ்டாரிகா அணிக்கு கால்வோ (3வது), அல்கோசெர் (7வது) என இருவரும் முதல் 10 நிமிடத்திற்குள் 2 கோல் அடித்தனர். பராகுவே சார்பில் சோசா மட்டும் 55வது நிமிடம் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில் கோஸ்டாரிகா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து 'டி' பிரிவில் பங்கேற்ற 3 போட்டியில் 2 வெற்றி, 1 'டிரா' செய்த கொலம்பியா (7 புள்ளி), 1 வெற்றி, 2 'டிரா' செய்த பிரேசில் (5) அணிகள் முதல் இரு இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறின. கொஸ்டாரிகா அணி 4 புள்ளியுடன் 3வது இடம் பெற்று வெளியேறியது. கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் காலிறுதியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா-ஈகுவடார் (ஜூலை 4), வெனிசுலா-கனடா (ஜூலை 5), உருகுவே-பிரேசில், கொலம்பியா-பனாமா (ஜூலை 6) மோத உள்ளன.
Readmore: தீ போல பரவும் “ஜிக்கா வைரஸ்”…! கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.!!