தீவிரவாதிகளுக்கு உதவிய 6 பேர் கைது!… தொடரும் பதற்றம்!…
Terrorist Attack: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்-ரஜோரி நாடாளுமன்றத் தொகுதியிக்கு வரும் மே 25ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கட்டுபாடுகள் அமலில் உள்ளன. மேலும் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய விமானப்படை வீரர்கள் சென்ற இரண்டு வாகனங்கள் ஷாசிதார் அருகே சென்ற போது, கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியளவில் பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் காயமடைந்த வீரர்கள் விமானப் படை ஹெலிகாப்டர்களில் சிகிச்சைக்காக உதம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற மூவர் நிலையாக இருப்பதாகவும். அவர்கள் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் குறித்து உள்ளூர் பாதுகாப்புப் படையினர் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், தீவிரவாதிகளுக்கு உணவு போன்ற உதவிகளை வழங்கிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முகமது ரசாக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து வாகன சோதனை நடைபெற்றுவரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது.