ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து..!! சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..!!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் அருவி, ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 14ஆம் தேதி காலை விநாடிக்கு 4,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, அன்று இரவு 14,000 கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து, ஆற்றில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 6 மணிக்கு விநாடிக்கு 19,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, பிற்பகலில் 20 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் 21 ஆயிரம் கனஅடியாகவும் உயர்ந்தது.
இதனால் பிரதான அருவி, சினிஃபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஆற்றிலும் தண்ணீர் வேகமெடுத்து ஓடுகிறது. இதனால், அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும், காவிரி ஆற்றில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தருமபுரி ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், கர்நாடக மாநில அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அப்போது, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். எனவே, ஆலம்பாடி முதல் ஒகேனக்கல் பிரதான அருவி வரை ஆற்றிலும், அருவிகளில் குளிக்கவும், ஆற்றுப்படுகையில் இறங்கவும் தடை விதிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
Read More : உங்கள் பான் கார்டில் ஏதேனும் சிக்கலா..? ஈசியாக மாற்றலாம்..!! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!