ரயில் கழிவறையில் தண்ணீர் வரவில்லை.. பயணிக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!!
திருமலா விரைவு ரயிலில் கழிப்பறை வசதி சரியில்லாத காரணத்தால் ஒரு பயணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்குமாறு தென் மத்திய ரயில்வேக்கு விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ரயிலில் அசுத்தமான கழிவறை விவகாரம் தொடர்பாக பயணிக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி தனது குடும்பத்தாருடன் திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் 3-ஆவது ஏ.சி.வகுப்பில் திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினம் வந்துள்ளார்.
அப்போது, அவர் பயணித்த பெட்டியின் கழிப்பறை மோசமான நிலையில் இருந்துள்ளது. கழிப்பறையில் தண்ணீரும் வரவில்லை. மேலும் பயணம் செய்த ரயில் பெட்டியில் குளிர்சாதனங்களும் சரியாக இயங்கவில்லை. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் மூர்த்தி புகார் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் சரி செய்ய முயன்றும் சரியாகவில்லை. இதையடுத்து துவ்வாடா நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது அங்குள்ள அலுவலகத்திலும் மூர்த்தி புகார் தெரிவித்துள்ளார்.
அப்போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ரயிலில் குளிர்சாதன பெட்டியில் காற்று வசதி இன்றியும், சுதாராமற்ற முறையிலும் பயணம் செய்ததாக இந்திய ரயில்வே மீது விசாகப்பட்டினம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கிய உத்தரவில், "பயணிகள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணம் செய்வதற்காக ரயில்வே நிர்வாகம் கட்டணம் வசூலிக்கிறது. இந்நிலையில் அடிப்படை வசதிகளான கழிப்பறையில் தண்ணீர் வசதி, ஏ.சி. வசதி, சரியான சூழல் போன்றவற்றை வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் கடமைப்பட்டுள்ளது. ஆனால் மூர்த்தி பயணித்த ரயிலில் பிரச்னைகள் இருந்துள்ளன. இதையடுத்து மூர்த்திக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவுகளுக்காக ரூ.5 ஆயிரமும் தென் மத்திய ரயில்வே வழங்கவேண்டும். இவ்வாறு ஆணையம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
Read more ; “தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம்”..!! போராளிகளின் தியாகங்களை நினைவுக் கூர்ந்த விஜய்..!!