சென்னையில் ரயிலை கவிழ்க்க சதி..? பீதியில் மக்கள்..!! நடந்தது என்ன..?
உலகின் மிகப் பழமையான ரயில் சேவைகளில் ஒன்று இந்திய ரயில் சேவை. ஆனால், ரயில் பயணங்கள் பாதுகாப்பானது என்று நம்பியிருந்த காலம் போய், ரயில் பயணத்தில்தான் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது என்கிற பேச்சு தற்போது அடிப்பட தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ரயில்களை கவிழ்க்க சதி செயல்கள் அரங்கேறி வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், சென்னை அருகே பொன்னேரி பகுதியில், திருவள்ளூர்-கும்மிடிப்பூண்டி ரயில் பாதையில் இணைப்பு கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. அதாவது சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டுள்ளது.
இன்று காலை ரயில்களுக்கு சிக்னல் கொடுக்க முயன்றபோது சிக்னல் விழாமல் இருந்துள்ளது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்ட சோதனையில் மேற்குறிப்பிட்ட விஷயம் தெரியவந்துள்ளது. சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டு தண்டவாளத்திலேயே போடப்பட்டுள்ளது. எனவே, இதனை செய்தது யார்? இந்த ரயில் பாதை வழியாக டெல்லிக்கு செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
எனவே, ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா..? என்கிற கோணத்தில் ரயில்வே போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த சம்பவம், வடமாநிலங்களை போலவே தமிழ்நாட்டிலும் ரயில்களை கவிழ்க்க சதி நடத்தப்படுகிறதா? என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.