விருதுநகரில் காங்கிரஸ் வெற்றி செல்லாது..!! விஜயபிரபாகரன் தொடர்ந்த வழக்கு..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!
விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றதை எதிர்த்து விஜயபிரபாகரன் தாக்கல் செய்த வழக்கில், மாணிக்கம் தாக்கூர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் வேட்புமனுக்களில் மாணிக்கம் தாகூர் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். முன்னதாக, விருதுநகரில் பிரேமலதா முன்வைத்த குற்றச்சாட்டுகளை மாணிக்கம் தாகூர் கடுமையாக மறுத்திருந்தார். ”விஜயபிரபாகரன் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது அங்குதான் இருந்தார். அப்படி இருக்கும்போது தவறான செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல நினைக்கும் பிரேமலதாவின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருந்தார்.
மக்கள் அளித்த தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் மக்களை குழப்புவதும் பொய் பேசுவதும் பிரேமலதாவுக்கு கைவந்த கலை. விஜயகாந்தின் அரசியலையும் முடித்து வைத்தவர் இவர்தான். இப்படிப்பட்ட தவறான பொய்யை பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. என்னைப் பொறுத்த மட்டில் தேர்தல் அதிகாரிகள் மிகக் கடுமையாக உழைத்து நேர்மையான வாக்கு எண்ணிக்கையை நள்ளிரவு ஒரு மணிவரை நடத்தி முடித்தார்கள். அப்படிப்பட்டவர்களை சென்னையில் அமர்ந்து கொண்டு இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.