பொது மக்களுக்கு மிரட்டல் விடுத்து சிக்கிய காங்கிரஸ் MLA... அண்ணாமலை வைத்த கோரிக்கை...!
அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காகவும், அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காகவும், காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மௌலானா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; சென்னை வியாசர்பாடியில், அரசுக்குச் சொந்தமான பொது வழியை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு, உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல், தமிழக அரசு தலைமைச் செயலாளர் உத்தரவின் பெயரில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளையும், பொதுமக்களையும், அடியாட்களைக் கொண்டு மிரட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் அச்சுறுத்திய காங்கிரஸ் கட்சியின் வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானாவை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
வியாசர்பாடி பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பொது வழிப்பாதையை, வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா ஆக்கிரமித்துள்ளதால், பொதுமக்கள் சுமார் மூன்று கிமீ தொலைவுக்குச் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. யார் கொடுத்த தைரியத்தில், ஹசன் மௌலானா பொதுவழியை ஆக்கிரமித்திருக்கிறார்? வியாசர்பாடி பகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் R.D.சேகருக்குத் தெரியாமல், திரு ஹசன் மௌலானா இந்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டிருக்கிறாரா?
தனது தொகுதி பொதுமக்கள் நலனை விட, கூட்டணிக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் ஆக்கிரமிப்பு, R.D.சேகருக்கு முக்கியமானதாகி விட்டதா? எப்படி இதனை அனுமதித்தார்?வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா ஆக்கிரமித்துள்ள பொதுவழியை மீட்க வந்த அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காகவும், அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காகவும், ஹசன் மௌலானா மீதும், உடன் வந்த அடியாட்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.