தமிழகத்தில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பிற்கான தொகுதிகள் என்ன.? மாஸ் என்ட்ரி கொடுத்த பா.சிதம்பரம்.! டெல்லியில் தீவிர ஆலோசனை.!
கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2014 ஆம் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் மிகப்பெரிய ஆதரவுடன் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தது.
2024 ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த பொது தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் தலைமையில் திமுக உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த கூட்டணி தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று உள்ளது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆன கே எஸ் அழகிரி உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன எந்தெந்த தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்பது குறித்து அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி முகுல் வாஸ்னிக் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இடம் கேட்டு அறிந்தார். மேலும் இந்த கூட்டத்தில் முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரம் வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்து கொண்டார்.
கேஎஸ்.அழகிரி முன்னிலையில் பா.சிதம்பரத்துடன் உரையாடினார் முகுல் வாஸ்னிக். மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரமும் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. கடந்த முறை தமிழக மற்றும் புதுச்சேரியில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கையில்தான் இருக்கிறது.