'இதை செய்தால் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும்’..!! டிப்ஸ் கொடுத்த பிரசாந்த் கிஷோர்..!!
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தின் சிங்வாரா தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். "3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதற்கு மோடியின் இமேஜ் மட்டும் காரணமில்லை. மொத்தம் 4 காரணங்கள் இருக்கிறது.
முதலில், பாஜக சித்தாந்தம் இந்துத்துவா, இரண்டாவது தேசியவாதம், மூன்றாவது பாஜகவின் நிதி வலிமை, நான்காவது அடித்தட்டு மக்களுக்கு உதவ அவர்கள் கொண்டு வந்த நலத்திட்டங்கள். மோடியின் இமேஜ் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், அதை வைத்து மட்டுமே பாஜக வாக்குகளை பெறுவதில்லை. பாஜகவை தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள் இந்த 4 விஷயங்களில் குறைந்தது மூன்றுக்குப் பதிலடி தர வேண்டும். இல்லையென்றால் என்ன செய்தாலும், என்ன கூட்டணி அமைத்தாலும் 10ல் 7 முறை உங்களுக்குத் தோல்வி தான் கிடைக்கும்.
காங்கிரஸ் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உதவும் திட்டங்களை கொண்டு வர வேண்டும். கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும். கூடுதல் அதிகாரம் தலைமைக்கு இருக்க வேண்டும். அதேபோல இந்துத்துவாவை விடச் சிறந்த ஒரு தேசியவாத சித்தாந்தம் உங்களிடம் இருக்க வேண்டும். இந்த 3 விஷயங்களில் பாஜகவை விடச் சிறந்து இருந்தால் மட்டுமே அவர்களை வெல்ல முடியும்.
கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக நீங்கள் கூறலாம். அங்கே கள நிலவரத்தைப் பார்க்க வேண்டும். பொதுமக்கள் அப்போது ஆளும் அரசு மீது கோபமாக இருந்த நிலையில், அவர்கள் எதிராக வாக்களித்தனர். அங்கே காங்கிரஸ் கட்சி மட்டுமே இருந்ததால் அவர்களுக்கு வாக்களித்தனர். சமீபத்தில் வெளியான தெலங்கானா தேர்தல் முடிவுகளில் கூட காங்கிரஸ் வெற்றிக்குக் காரணம் கேசிஆர் ஆட்சிக்கு எதிரான மனநிலை தானே தவிர காங்கிரஸுக்கு செல்வாக்கு இல்லை” என்று தெரிவித்தார்.