Congress | நெல்லை, விளவங்கோடு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு..!! மயிலாடுதுறை என்ன ஆச்சு..?
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். முன்னதாக, ஒரு தொகுதிக்கு 3 பேர் என 9 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கான உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் செல்வப்பெருந்தகை கடந்த மார்ச் 20ஆம் தேதி டெல்லி சென்றார்.
இதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9-ல் 7 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, திருவள்ளூர் தொகுதிக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரிக்கு முன்னாள் எம்எல்ஏ கே.கோபிநாத், கரூருக்கு ஜோதிமணி, கடலூருக்கு விஷ்ணு பிரசாத், சிவகங்கைக்கு கார்த்தி சிதம்பரம், விருதுநகருக்கு மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரிக்கு விஜய் வசந்த் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதில் 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மீதமுள்ள 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், விளவங்கோடு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக தாரகை அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை மறுநாள் வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு முடியவடைய உள்ள நிலையில், இன்னும் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கவில்லை.