cVIGIL| தேர்தல் முறைகேடுகளுக்கு '100' நிமிடங்களில் நடவடிக்கை.! தலைமை தேர்தல் ஆணையர் அதிரடி.!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நடைமுறை இருக்கும் தேதியை மற்றும் அட்டவணை மார்ச் 13 ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்டு இருந்த செய்தியில் மார்ச் 13 ஆம் தேதிக்கு பிறகு பொது தேர்தல் நடைபெறும் தேதி மற்றும் அட்டவணை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாட்டில் உள்ள மாநிலங்கள் முழுவதிலும் தேர்தல் பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தமிழகம் பீகார் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்தலுக்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக பொது தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் குமார் தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்யும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தேர்தலில் நடைபெறும் புகார்களை பற்றி 'cVIGIL' என்ற ஆன்லைன் செயலியில் புகார் தெரிவித்தால் '100' நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்வது குறித்து தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
பாராளுமன்றத் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டவுடன் ஆன்லைன் பண பரிவர்த்தனை குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார். முறைகேடுகள் இல்லாத தேர்தலை நடத்துவதே இந்திய தேர்தல் ஆணையத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.