நிலக்கரி ஹாப்பர் இடிந்து விழுந்து பெரும் விபத்து!. பல தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்!. ஒடிசாவில் பயங்கரம்!.
Coal hopper collapses: ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டம் ராஜ்கங்பூரில் அமைந்துள்ள டால்மியா தொழிற்சாலையில் நிலக்கரி ஹாப்பர் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஒடிசாவில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் வியாழக்கிழமை (ஜனவரி 16) மாலை பெரும் விபத்து ஏற்பட்டது. சுந்தர்கர் மாவட்டத்தின் ராஜ்கங்பூரில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலைக்குள் திடீரென நிலக்கரி ஹாப்பர் (ஒரு பெரிய இரும்பு அமைப்பு) இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. அப்போது பணியில் இருந்த தொழிலாளர்களில் பலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிற்சாலைக்கு அருகில் 12க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்ததும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராஜ்கங்பூர் காவல் நிலையப் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் எம். பிரதான் கூறுகையில், இதுவரை உயிர் சேதமோ, காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனால், தொழிலாளர்கள் பொதுவாக கட்டிடத்தின் கீழ் வேலை செய்வதால், சில தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று கூறினார்.
இந்த விபத்துக்குப் பிறகு, தொழிற்சாலையின் பிரதான வாயிலில் ஏராளமான தொழிலாளர்கள் திரண்டனர். இந்த விபத்து குறித்து தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்ததாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொழிற்சாலையில் உள்ள பாதுகாப்பு தரங்கள் குறித்து பலமுறை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். நிலக்கரி ஹாப்பரை ஆய்வு செய்ய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் இந்த பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன என்று குற்றம்சாட்டப்படுகிறது. முன்னதாக, கடந்த சில நாட்களுக்குமுன், அசாம் உம்ராங்சோ நிலக்கரி சுரங்கத்தில் ஒன்பது தொழிலாளர்கள் சிக்கியதில் இதுவரை நான்கு உடல்கல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறிப்பிடத்தக்கது.