'பரோட்டா மாஸ்டர் ஆவதற்கு கோச்சிங் கிளாஸ்..!'அட நம்ம மதுரைல தாங்க!
மதுரையில் புரோட்டா எப்படி செய்வது, புரோட்டா மாஸ்டர் ஆவது எப்படி என்பதை சொல்லிக் கொடுக்கும் பயிற்சி பள்ளி இயங்கி வரும் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. என்னதான் வேலை கிடைத்தாலும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை தான் சம்பளம் தருகிறார்கள். அதை வைத்துக்கொண்டு தங்களது குடும்பத்தை கவனித்து வரும் இளைஞர்களும் இருக்கிறார்கள்.
இவ்வாறு இருக்க சமூக வலைத்தளங்களில் பல்வேறு வகையான மீம்ஸ்களை பார்த்திருப்போம். அதில் பரோட்டா மாஸ்டர்கள் தேவை எனவும் 30 ஆயிரம் வரை சம்பளம் என்றும் தங்குமிடம் உணவு இலவசம் என்றும் அடிக்கடி பார்த்திருப்போம். இந்நிலையில் அதனை உண்மையாக்கும் வகையில் மதுரையில் பரோட்டா ஸ்கூல் ஒன்று இயங்கி வருகிறது.
மதுரை தபால் தந்தி நகர் ரோடு, நான்காவது குறுக்கு தெருவில் இயங்கி வருகிறது இந்த புரோட்டா பள்ளி நம்பர் ஒன். இந்த பள்ளியில் புரோட்டா எப்படி செய்வது என சொல்லி தருகிறார்களாம். மேலும் புரோட்டா மாஸ்டர் வேலையும் வாங்கி தருகிறார்களாம். பத்து நாட்கள் பயிற்சி வழங்கப்படும். இதற்கு கட்டணம் ரூ.4,000 எனவும், ஆண், பெண் என இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு வெளியூரை சேர்ந்தவர்களுக்கு விடுதி வசதியும் உள்ளதாம். பல தேர்வுகளுக்கு பயிற்சி மையங்கள் இருந்து வரும் நிலையில், பரோட்டாவுக்கு பயிற்சி மையம் இருப்பது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பரோட்டா ஸ்கூல் நடத்தி வருபவர் கூறும் போது, “இங்கு பரோட்டா எவ்வாறு செய்வதென்று அனைவருக்கும் சொல்லி தரப்படுகிறது. இங்கு அனைத்து வகையான பரோட்டாக்களும் எவ்வாறு செய்வதென்று சொல்லி தருகிறோம். இது மட்டுமல்லாமல் சைனீஸ் வகை உணவுகளும் சொல்லி தரப்படுகிறது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 2 மணி நேரம் வரை 10 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை சொல்லி தருகிறோம்” என்றார்.