"நாடும் நமதே, நாற்பதும் நமதே"! கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சரின் பொங்கல் வாழ்த்து மடல்.!
தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வாழ்த்து செய்தி தெரிவித்திருக்கிறார். மேலும் சமத்துவ பொங்கல் கொண்டாட தமிழக மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமத்துவ பொங்கல் என கோலமிட்டு அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் தமிழக மக்கள் எனக்கு வழங்கும் பொங்கல் பரிசு எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அந்தக் கடிதத்தில் பொங்கல் பண்டிகை என்று தினமும் என்னை சந்தித்து வாழ்த்து பெறும் கழக நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உடன்பிறப்புகள் அனைவரும் தங்கள் பகுதிகளில் உள்ள மக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாட வேண்டும் என அன்பு கட்டளை இட்டுள்ளார். மேலும் சாதி மதங்கள் கடந்த சமத்துவ பொங்கல் கொண்டாடவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் .
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் காளைகளுக்கும் மாடு பிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கி மகிழ்ந்திட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும். தை பிறக்கப் போகிறது. நமக்கான வழியும் பிறக்க இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். வர இருக்கின்ற திமுகவின் இளைஞர் அணி மாநாட்டில் முழங்க இருக்கும் மாநில உரிமை மீட்பு முழக்கம் டெல்லியையும் அதிரசியட்டும் என தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் தமிழ் சங்கமும் நிகழ்ச்சியில் முழங்குகின்ற பறை இசை திராவிடத்தின் வெற்றி இசையாக மாறட்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். கழக உடன்பிறப்புகளின் கடின உழைப்பினால் நாற்பதும் நமதாகட்டும் நாடும் நமதாகட்டும் என கழகத் தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து செய்தியை வெளியிட்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சமூக நீதி சமத்துவம் மற்றும் மதச்சார்பற்ற அரசு ஆகியவையே திராவிட அரசின் முழு மூச்சு எனவும் தெரிவித்துள்ளார்.