திடீரென சட்டப்பேரவையில் கண்ணீர் விட்ட CM ஸ்டாலின்..!! என்னை அப்படி அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி..!!
2025ஆம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் கூட்டத்தொடர் முடிவுக்கு வருகிறது. இன்று கடைசி நாள் என்பதால் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், ”அரசுப் பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர் கல்லூரி செல்ல முடியாத நிலையை மாற்றி உயர்கல்வி பயில உருவாக்கப்பட்ட திட்டம் தான் 'புதுமை பெண்' திட்டம்.
இதேபோல் 'தமிழ் புதல்வன்' திட்டத்தில் மாணவர்களுக்கும் ரூ.1,000 வழங்குகிறோம். அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர்களுக்கும் புதுமை பெண் திட்டத்தை விரிவுப்படுத்தி இருக்கிறோம். தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ஒரு மாணவி பேசினார். என் குடும்பம் வறுமை காரணமாக கல்லூரி சென்று படிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. பணம் இல்லை. அதனால் வேண்டாம் என்று என் அம்மா சொல்லிவிட்டார் என்று கூறினார்.
'புதுமை பெண்' திட்டத்தை கேள்விப்பட்டு என் கல்லூரி செலவை நானே பார்த்து கொள்கிறேன் என்றதும் என் அம்மா சம்மதம் தெரிவித்தார். ஆனால் தினமும் பஸ்சில் போகணுமே? என்று சொன்னார். அதற்கு தான் 'விடியல்' பயணம் இருக்கிறதே என்று நான் சொன்னேன். ஆக 2 திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு நான் படித்து வருகிறேன் என்று சொன்னார். அந்த மாணவி சொன்ன சொற்கள் தான் விடியலுக்கான சாட்சி. அதனால் தான் தமிழ்நாடு மாணவ-மாணவிகள் அப்பா.. அப்பா என்று அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், இந்த பாச உணர்வு தான் முக்கியம்'' என்று கூறி கண்கலங்கினார்.
அப்போது, அவரது குரல் தளுதளுத்துப்போனது. சில வினாடிகள் பேச்சை நிறுத்தி, கண்களை துடைத்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் பேச தொடங்கினார். அப்போது, ,''ஊட்டச்சத்தை உறுதி செய் என்று ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளோம். அதில், தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டனர். இதில் 77.3 விழுக்காடு குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
இதில் பயனடைந்த தாய், என் குழந்தை மிக குறைவான எடையுடன் பிறந்தது. என்ன செய்யப்போறோம் என்று நினைத்தேன். முதலமைச்சரின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டத்தால் நிறைய பொருட்கள் கிடைத்தது. அதன்மூலம் நல்ல ஆரோக்கியத்துடன் என் குழந்தை வளர்ந்து உள்ளதாக சொன்னார். அந்த தாயின் கனிவான வார்த்தைகளில் விடியல் தெரிகிறது'' என்று பேசினார்.