மெரினா மரணத்திற்கு முதல்வர் தான் காரணம்..!! நிவாரணம் கொடுத்துவிட்டால் அந்த குடும்பத்தை காப்பாற்றிவிட முடியுமா..?
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 72 விமானங்களில் வண்ணமயமான சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கானோா் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டது. இதை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை விரும்பியது. இதற்காக, பொதுமக்கள் அதிகளவில் வர வேண்டுமென விமானப் படை அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், விமானப் படை சாகச நிகழ்ச்சியை சென்னை மெரினா மட்டுமின்றி, தெற்கில் கோவளம் முதல் வடக்கில் எண்ணூர் வரை கடற்கரைகளிலும், மொட்டை மாடிகளில் என 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கண்டுகளித்தனர். இந்த நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்படாத காரணத்தால், மக்கள் துன்பத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.
இது வன்மையாக கண்டித்தக்கது. இனியாவது திமுக அரசு லட்சக்கணக்கான மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு உளவுத்துறையின் தகவலை பெற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து செயல்பட வேண்டும். அரசாங்கம் என்றால் மக்களை பாதுகாக்க வேண்டும். அது கடமை. மெரினாவில் நடந்த மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.
விமான சாகச நிகழ்ச்சியை வந்து பாருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தான் அறிவிப்பை வெளியிட்டார். அனைவரையும் அழைத்துவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவில்லை. இதனால், பலர் இறந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுத்துவிட்டால் அந்த குடும்பத்தை காப்பாற்றிவிட முடியுமா..?” என்று சரமாரியாக விளாசினார்.
Read More : அடேங்கப்பா..!! 6 லட்சம் பேராம்..!! சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சி..!!