உரிமைத்தொகை..!! பொங்கல் பண்டிகைக்கு முன் பெண்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!
மகளிர் உரிமைத்தொகை திட்டமானது கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி துவங்கப்படும் என்று 2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் முகாமும் மாநிலம் முழுவதும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற்றது. இத்திட்டத்தில் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். அதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு மணியார்டர்கள், வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.1,000 வழங்கப்பட்டது.
இதற்கிடையே, இத்தொகையை பெற தவறியவர்கள், நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், அக்டோபர் 2ஆம் தேதி சேர்க்கப்பட்ட புதிய விண்ணப்பதாரர்களுக்கு அந்த மாதமே 14 ஆம் தேதி தொகை வழங்கப்பட்டது. அதிலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசு நிர்ணயித்த அத்திட்ட விதிகளின் கீழ் வராதவர்களாக நிராகரிக்கப்பட்டனர். இந்நிலையில், தங்களுக்கு தகுதி இருந்தும் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்று அதிகாரிகளிடத்தில் பெண்கள் முறையிட்டதன் பேரில் அதற்கான மறு வாய்ப்பும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.
அதன் மூலம் 11.85 லட்சம் மகளிரிடம் இருந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் மேல்முறையீட்டு விண்ணப்பமானது மீண்டும் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை 2ஆம் கட்டத்தை தொடக்கி வைத்தார். ஏற்கனவே இருந்த பயனாளர்களுடன் தற்போது புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் இந்த திட்டத்தால் பயன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இம்முறையும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? எப்போது விண்ணப்பிப்பது என்ற கேள்விகள் எழுந்தன. இந்த சூழலில் தமிழக அரசின் சார்பில் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அந்த குறுஞ்செய்தியில், "வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இது குறித்த விசாரணைக்கு தங்களைத் தொடர்பு கொள்ளும் பொழுது உரிய தகவல்களைத் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் தங்களது மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகையின் பயனாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊனமுற்றோர் உதவித் தொகை பெறுவோருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாமல் உள்ள நிலையில் அவர்களையும் பயனாளர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இல்லத்தரசிகளுக்கு நல்ல செய்தி தேடி வரும் என்று தமிழ்நாடு அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.