Lok Sabha தேர்தலுக்கு முன் அமலாகிறது குடியுரிமை திருத்த சட்டம்..!! மத்திய அரசு முடிவு..!! வெளியான பரபரப்பு தகவல்..!!
குடியுரிமை திருத்தச்சட்டத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிப்பவர்கள், மதரீதியிலான துன்புறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தால் குடியுரிமை வழங்க சிஏஏ (குடியுரிமை (திருத்த) சட்டம்) வகை செய்கிறது. குறிப்பாக, இந்த 3 நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள்.
ஆனால், இந்தச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி 2019 டிசம்பரில் (அமல்படுத்தப்பட்ட மாதம்) இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவையில் சிஏஏக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, CAA, NPR மற்றும் NRC சட்டங்களை ஆகியவற்றை அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். மேலும், சிஏஏ சட்டத்தை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த ஜன. 29ஆம் தேதி அடுத்த 7 நாட்களுக்குள் நாடு முழுவதும் சிஏஏ அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்தார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, கடந்த பிப். 10ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'மக்களவை தேர்தலுக்கு முன் சிஏஏ அமல்படுத்தப்படும். இது காங்கிரஸ் அரசின் வாக்குறுதி. நாடு பிரிக்கப்பட்ட பின், அந்த நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்ட போது, அகதிகள் இந்தியாவில் வரவேற்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் உறுதியளித்தது. ஆனால், இப்போது காங்கிரஸ் பின்வாங்குகிறது. இது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது' என்று தெரிவித்தார்.
Read More : Aadhaar | ’ஆதாரை கையில் வைத்துக்கொண்டே இதை செய்யாமல் இருக்கீங்களா’..? உடனே வேலையை முடிங்க..!!
இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கான விதிகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக, 'தமிழ்நாட்டில் சிஏஏ சட்டத்தைக் கால் வைக்க விடமாட்டோம்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும், அதேபோல் 'சிஏஏ சட்டத்தை அனுமதிக்க மாட்டோம்' என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary : CAA rules likely to be notified before Lok Sabha poll announcement