சினிமா டூ அரசியல்..!! எம்ஜிஆருக்கு பிறகு அரசியலில் உச்சம் தொடாத நடிகர்கள்..!! முதல்வர் ஆவாரா விஜய்..?
சினிமா டூ அரசியல் என புதிய அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் விஜய். இதுவரை எத்தனை பேர் சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார்கள்..? என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
* திமுகவில் செல்வாக்கு மிக்கவராக இருந்த எம்.ஜி.ஆர்., ஒரு கட்டத்திற்குப் பின்னர் அக்கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் வெளியேற்றப்பட்டார். அப்போது அவர் தனிக்கட்சி தொடங்கும் ஆசையில் இல்லை. திமுகவில் எம்.ஜி.ஆருக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக அவரது விசுவாசிகள் கலங்கினர். அவரைக் கட்சி ஆரம்பிக்கும் படி நிர்ப்பந்தித்தனர்.
* இதையடுத்து, எம்.ஜி.ஆர். அவருக்கு நெருக்கமாக இருந்த அனகாபுத்து ராமலிங்கம் என்பவர், ஆரம்பித்து வைத்திருந்த 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழக'த்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது அவர், 'ஒரு சாதாரண தொண்டன் ஆரம்பித்த கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்' என்று அறிக்கை விட்டார். அப்பேச்சு இன்னும் அதிக மக்களைக் கவர்ந்தது. அந்தக் கட்சிதான் படிப்படியாக வளர்ந்து இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக உயர்ந்து நிற்கிறது.
* எம்.ஜி.ஆரைப் போலவே திமுகவில் இருந்தவர்தான் சிவாஜி. பகுத்தறிவதாம் பேசி வந்த அவர், திடீரென்று திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்றார். அது பரபரப்பானது. கட்சி விளக்கம் கேட்டது. அவர் கட்சியை விட்டு விலகினார். அவர் தேசியவாதியாக மாறினார். 'வீரபாண்டி கட்டபொம்மன்; 'கப்பலோட்டிய தமிழன்' என அவரது மனம் தேசிய நீரோட்டத்தில் கலந்தது. அதற்கு காமராஜ் முக்கிய காரணமாக இருந்தார். ஆகவே, அவர் அங்கே சென்று, பின்னர் தமிழக முன்னேற்ற முன்னணி எனப் புதுக்கட்சி தொடங்கி ஜனதாதளம் கட்சியுடன் இணைத்தார். பின்னர் சிறுக சிறுக தேய்ந்து அரசியலை விட்டே ஒதுக்கினார்.
* 'முந்தானை முடிச்சு' படம் வெளியான காலகட்டத்தில் பாக்யராஜ், எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசாகக் கொண்டாடப்பட்டவர். அவர் எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரின் தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்க முயன்றார். அது பலன் தரவில்லை. தொடங்கிய வேகத்திலேயே தோல்வியைத் தழுவியது கட்சி.
* இவரைப்போல் திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த டி.ராஜேந்தர், அக்கட்சியிலிருந்து வெளியேறி இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். டி.ராஜேந்தர், பின் விஜய டி ராஜேந்தர் என தன் பெயரை எண் கணிதம் படி மாற்றி மாற்றி அமைத்ததைப் போல் கட்சியின் பெயரை மாற்றி மாற்றி அமைத்தார். ஆனால், மக்களின் மனதை இவரால் மாற்றி அமைக்க முடியவில்லை.
* இதேபோல் திமுகவில் ராஜ்சபா எம்.பி.ஆக இருந்தவர் சரத்குமார். அவர், பின்னர் அதிமுக பக்கம் போனார். இறுதியாக அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
* இதற்கு இடையில் ஒருவர் இருக்கிறார். அவர்தான் கார்த்திக். அவரது கட்சி பெயர் என்னவென்றே பலருக்குத் தெரியாது. மனித உரிமை காக்கும் கட்சி என்பது அவர் கட்சியின் பெயர். அவர் மனித உரிமையைக் காப்பதற்காக இதுவரை எதையுமே செய்ததில்லை. ஆகவே, மக்கள் அவரை பொருட்டாக நினைக்கக்கூட இல்லை.
* எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்குப் பின்னர் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து அதிக உயரம் தொட்டவர் விஜயகாந்த்தான். எதிர்க்கட்சித் தலைவராகும் அளவுக்குப் போனார்.
* இதே அளவுக்கு தானும் உயர்ந்துவிட முடியும் என சினிமா டூ அரசியல் வாழ்க்கைக்கு வந்தார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்ற அவரது கட்சியின் பெயரே கழகங்கள் இல்லாத புதுவிதமாக இருந்தது. கூடவே அது குழப்பத்தையும் கொடுத்தது. கட்சி ஆரம்பித்த வேகத்தில் தேர்தலைச் சந்தித்தார் கமல். ஆனால், போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தோல்வி பயம் வந்தது. கோவையில் போட்டியிட்டு அவரே வானதி சீனிவாசனிடம் தோற்றார்.
* இந்தப் பட்டியலில் கட்டாயம் சீமானை விட முடியாது. அவர் இயக்குநர்தான். நடிகராகவும் இருந்துள்ளார். அவரது நாம் தமிழர் கட்சி, தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் வளர்ந்துவரும் கட்சியின் பட்டியலில் உள்ளது. தேர்தல் களத்தில் சீமான் கட்சி வெற்றி பெறவில்லை என்றாலும் அவர் தமிழக அரசியலில் புதிய சக்தியாகவே கருதப்படுகிறார்.
* தற்போது நடிகர் விஜயும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். அவரது கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம். எம்ஜிஆருக்கு பிறகு கட்சி தொடங்கிய யாரும் அரசியலில் உச்சம் பெறவில்லை. சிவாஜி, பாக்கியராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பலரும் கட்சி தொடங்கினர். ஆனால், முதல்வர் என்ற இலக்கை யாரும் நெருக்க முடியவில்லை. தனது கட்சி பெயரில் வெற்றியை வைத்திருக்கும் நடிகர் விஜய், அந்த சாதனையை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவே அதற்கு பதில் தரும்.