இந்த வருடம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து...! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி அறிவிப்பு...!
தென்மாவட்டங்களில் கனமழை காரணமாக சென்னை ஆளுநர் மாளிகையில் நடக்க இருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.
தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உதவிகளுக்காக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கனமழை பாதிப்பு மற்றும் அங்கு நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து இந்திய ராணுவம், விமானப் படை, கப்பல்படை, தேசிய பேரிடர் மீடப்புப் படை, இந்திய வானிலை மையம், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை ஆளுநர் மாளிகையில் நடக்க இருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக கவர்னர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்; கனமழை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நிலவும் தீவிர சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 21.12.2023 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவிருந்த "அட்வென்ட் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை" ரத்து செய்ய தமிழ்நாடு கவர்னர் மாளிகை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.