சீனாவில் பயங்கரம்: "நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி.." 7.1-நிலநடுக்கத்தால் 120 வீடுகள் சேதம்.!
இந்தியாவின் அண்டை நாடான சீனா நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் மலைப்பிரதேசமான
லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 120 வீடுகள் சேதம் அடைந்ததாகவும் சீனாவின் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
சீனாவின் தென்மேற்கு மாகனமான யுனான் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக சீனா அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.ஜாவோடோங் நகரின் அருகே அமைந்திருக்கும் லியாங்சுய் மலை கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் 47 நபர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் மீட்பு குழு தெரிவித்துள்ளது மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து 500 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக சீன அரசின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலச்சரிவு தொடர்பாக சீனாவின் பேரிடர் மேலாண்மை குழு நடத்திய முதல் கட்ட விசாரணையில் 100 மீட்டர் அகலம் மற்றும் 60 மீட்டர் உயரம் கொண்ட செங்குத்தான மலை பகுதியில் உச்சி இடிந்து நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக அவசர கால மேலாண்மை நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. பேரிடர் மீட்பு பணிகளுக்காக 7 மில்லியன் அமெரிக்க டாலர்களை சீன அரசு நிவாரணமாக அறிவித்திருக்கிறது. உயிரிழப்புகளை குறைப்பதற்கும் காணாமல் போனவர்களை தேடுவதற்கும் சிறப்பு மீட்பு படையினர் களம் இறக்கப்பட்டு இருப்பதாகவும் சீனா அதிபர் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலச்சரிவை தொடர்ந்து சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியா மங்கோலியா ஆப்கானிஸ்தான் பகுதிகளிலும் உணரப்பட்டது. ரிக்டேர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.1 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் சீனாவில் 120க்கும் மேற்பட்ட வீடுகள் செய்தமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவு அடுத்தடுத்து சீனாவை தாக்கி இருக்கும் நிகழ்வு மக்களிடம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.