மழை பாதிப்பு... இந்த முறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு...!
மீனவர்களுக்கு நவீன தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் புயல், கனமழை குறித்த தகவல்களை உரிய நேரத்தில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்; முன்னெச்சரிக்கை இருந்தாலே எந்த பாதிப்பையும் தடுக்க முடியும். முன்பெல்லாம் வடகிழக்கு பருவகாலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இப்போது, காலநிலை மாற்றத்தால், சில நாட்கள், சில மணிநேரங்களில் மொத்தமாக கொட்டி தீர்த்துவிடுகிறது. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவகாலத்தில், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத பெருமழை பெய்து கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதை தமிழக அரசு திறம்பட எதிர்கொண்டதால், பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பின. அனைத்து அமைச்சர்கள், துறை அதிகாரிகள், அலுவலர்களும் களத்தில் இருந்ததால், உடனடியாக நிலைமையை சமாளித்தோம்.
அதேபோல, இந்த ஆண்டும் பேரிடர்களின் தாக்கத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தலைமைச் செயலர் கடந்த செப்டம்பர் 14, 21-ம் தேதிகளில், பருவமழை ஆயத்த பணிகள் குறித்த கூட்டம் நடத்தி, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சரியான நேரத்தில், மக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்க தேவையான உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பெய்யும்மழையின் அளவு அப்போதே தெரிந்தால்தான், அணைகளில் நீர் திறப்பு மேலாண்மை, வெள்ள முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்க முடியும். அதற்காக, 1,400 தானியங்கி மழைமானிகள், 100 தானியங்கி வானிலை மையங்களை நிறுவி நிகழ்நேர தகவல்களை பெற்று வருகிறோம். இந்த தகவல்களை மக்களுக்கு வழங்கTN-Alert என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு நவீன தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் புயல், கனமழை குறித்த தகவல்களை உரிய நேரத்தில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.