‘மிக்ஜாம்’ நிவாரண பணிகள்...! கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்து முதல்வர் உத்தரவு...!
மீட்பு பணிகளை துரிதப்படுத்த கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 03.12.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து 04.12.2023 அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தமாக 866 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த இடங்களில் இருந்து 19 ஆயிரத்து 86 பேர் படகு உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். NDRF, TNSDA-வைச் சேர்ந்த 36 மீட்பு குழுக்களைச் சேர்ந்த 850 பேர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளச் சேதங்களை மதிப்பிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மழை வெள்ள பாதிப்பு தொடர்பான மீட்பு பணிகளை துரிதப்படுத்த கூடுதல் அமைச்சர்கள் நியமனம். கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளுக்கு அமைச்சர் ரகுபதி நியமனம். அதேபோல செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் நியமனம். ராயபுரம் பகுதிக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் நியமனம். அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பகுதிகளோடு சேர்த்து அரும்பாக்கம் பகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.