கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை விவகாரம்..!! முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு உத்தரவு..!!
கிருஷ்ணகிரி தனியார் மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில் விசாரணையை துரிதமாக மேற்கொள்ளவும், சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடைபெற்ற என்சிசி முகாமில், போலியான பயிற்றுநர்கள் கலந்துகொண்டு, அங்கு பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலியான என்சிசி பயிற்றுநர்கள் இதே போன்று, மேலும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், இத்தகைய பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. இந்தப் பள்ளிகள், கல்லூரிகளிலும் பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்களைப் பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், பவானீஸ்வரி ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்து உரிய பரிந்துரைகளை அளிக்க சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ் தலைமையில் பல்நோக்கு குழு ஒன்றை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேற்கூறிய சம்பவம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனையை பெற்றுத்தரவும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : இன்னும் சில மணி நேரங்களில்..!! கட்சிக் கொடியை அறிமுகம் செய்கிறார் தவெக தலைவர் விஜய்..!!