சாதிவாரி கணக்கெடுப்பு | மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தனி தீர்மானம்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் தினமும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து வருகின்றனர்.
பேரவை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் அதிமுக உறுப்பினர்களை இந்த கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யக் கோரி அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டது. இதனையடுத்து, அதிமுகவினரை நடப்பு கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் எனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கொரோனா முடிந்து 3 ஆண்டுகளாகியும் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் இருப்பது ஒன்றிய அரசு தனது கடமையை புறக்கணிக்கும் செயலாகும். மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதனோடு சேர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனே நடத்த பிரதமருக்கு கடந்த அக்டோபரில் கடிதம் எழுதி உள்ளேன்.
சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் கருத்து. விதிகளின்படி சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள சில விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது. மக்கள்தொகை, சாதி வாரி கணக்கெடுப்பு போன்றவற்றை மத்திய அரசே முழுமையாக மேற்கொள்ள முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. சம வாய்ப்பு கிடைக்க கல்வி, சமூகம், பொருளாதாரம் அவசியமாக இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.
Read more ; “விளம்பரத்தை தேடுவதிலேயே அதிமுக-வினர் முன்னிப்பாக உள்ளனர்” : இபிஎஸ்-வை விளாசிய ஸ்டாலின்!