தமிழகத்தில் BSNL 4ஜி சேவை வந்தாச்சு.. இன்னும் இரண்டே மாதம் தான்..!!
தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்குள் 4ஜி சேவை அமல்படுத்தப்படும் என பி.எஸ்.என்.எல் தலைமைப் பொது மேலாளர் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு ஜியோ நிறுவனம், ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தின. ஜியோ வாடிக்கையாளர்கள் பலர், பி.எஸ்.என்.எல் நோக்கியும் படையெடுத்து வருகின்றனர். பி.எஸ்.என்.எல். குறைந்த விலையில் அதிக டேட்டா பலன்களோடு ரீசார்ஜ் திட்டங்களை வைத்திருப்பதால், பெரும்பாலானோர் BSNL-க்கு மாறி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, நாட்டில் சில முக்கிய நகரங்களில் மட்டும் இந்த 5ஜி சேவை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 5 ஜி சேவை எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிம் பேசிய, பி.எஸ்.என்.எல் தலைமை பொது மேலாளர் பனாவத் வெங்கடேஷ்வரலு , ''தமிழ்நாட்டில் 6,400 இடங்களில் பி.எஸ்.என்.எல் சேவை வழங்கப்படுகிறது. தற்போது 2ஜி இணைப்புகளை 4ஜி இணைப்புகளாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த 2 மாதங்களில் 4ஜி வேகத்தில் இணையதள சேவை கிடைக்கும்.
தற்போது பி.எஸ்.என்.எல் பிரீ-பெய்டு சிம்-க்கான தேவை அதிகரித்துள்ளது. 4ஜி சேவை அறிவிப்பால் கடந்த 2 மாதத்திற்குள் குறிப்பாக, 4.5 லட்சம் வாடிக்கையாளர்கள் புதியதாக இணைந்துள்ளனர். இதில் 2 லட்சம் பேர் வேறு நிறுவனங்களிலிருந்து பி.எஸ்.என்.எல்-க்கு மாறியுள்ளனர். ஆப்டிக் ஃபைபர் சேவையை பொறுத்தவரை 75 சதவீதமான வாடிக்கையாளர்கள் கிராமப் பகுதியில் உள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் இணைப்புகளை கொண்டுள்ளோம்.
கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் இணைப்புகளை அடுத்த ஓராண்டில் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஃபைபர் இணைப்பு சேவையின் தேவையும் அதிகரித்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் தற்போது செம்பிலான (காப்பர்) நெட்வொர்க் அனைத்தும் ஃபைபரில் ஆன நெட்வொர்க்காக மாற்றப்பட்டு வருகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்து தொழில்நுட்பத்திலும் முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தான் 4ஜி, 5ஜி போன்ற சேவைகள் வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்படுகின்றன.
மிகப்பெரிய சேவையான எஃப்.டி.டி.ஹெச் இணைப்பு சேவைக்காக 24 மணி நேர ஒத்துழைப்பு வழங்குவதற்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட மையம் திருச்சியில் 2 மாதத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளது. 4ஜி சேவை கொண்டுவரப்பட்டால், பி.எஸ்.என்.எல் இணையதள சேவை வேகம் மேலும் அதிகரிக்கும். 10 எம்.பி.எஸ் வேகத்தில் தற்போது சேவை வழங்கப்படுகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் 5ஜி சேவை கொண்டு வரப்படும். ஸ்பெக்ட்ரம் அடிப்படையில் இணையதள வேகம் சேவை பெறப்படும் நிலையில், தற்போது பி.எஸ்.என்.எல்-லுக்கு விரைவாக 4 ஜி சேவை, அடுத்ததாக 5 ஜி சேவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
Read more ; பெண் காவலர்களுக்கு ஒராண்டு மகப்பேறு விடுமுறை..!! – முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!