செஸ் ஒலிம்பியாட் போட்டி!. தங்கத்தை தட்டிச்சென்ற இந்திய ஆடவர் அணி!. முதல் முறையாக தங்கம் வென்று அசத்தல் சாதனை!
Chess Olympiad: 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவின் ஆடவர் அணி முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த 11 சுற்று போட்டிகளில், ஓபன் (ஆடவர்) பிரிவில் 197 அணிகள், மகளிர் பிரிவில் 183 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்திய ஓபன் (ஆடவர்) பிரிவில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ், ஹரிகிருஷ்ணா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.அதேபோல், மகளிர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி, ஹரிகா துரோணோவள்ளி, வந்திகா அகர்வால், தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் உள்ளனர்.
துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி, இதுவரை பத்து சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் முதலிடத்தில் உள்ளன. முன்னதாக, 9வது சுற்றில் இந்திய அணி கடந்த முறை தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. கடும் போராட்டங்களுக்கு பின்னர் இந்த போட்டி டிராவானது. 8 சுற்றுகளில் வாகை சூடிய இந்தியா முதல் முறையாக டிரா செய்தது.
இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆடவருக்கான 10 வது சுற்றில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகேசி தலா ஒரு புள்ளிகளையும் விதித் குஜராத்தி 0.5 புள்ளிகளை பெற்றனர்.இதன் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிப்பது மட்டுமல்லாமல் தங்க பதக்கத்தையும் உறுதி செய்து விட்டது.ஆடவர் பிரிவில் முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
மேலும் இதனை தொடர்ந்து நடைபெற்ற மகளிருக்கான பத்தாவது சுற்றில் இந்தியா சீனா அணிகள் மோதின இதில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் திவ்யா தேஷ்முக் ஒரு புள்ளிகளையும், வைசாலி, ஹரிக்கா துரோணவள்ளி மற்றும் தானியா சச்சித்தேவ் ஆகியோர் தலா 0.5 புள்ளிகளை பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. அந்தவகையில் இன்று இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் ஆடவர் அணி ஸ்லோவேனியாவையும், மகளிர் அணி அஜர்பைஜானையும் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.