வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்...! INTERPOL உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு...!
சென்னையில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக, இண்டர்போல் அமைப்பின் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு.
சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் பெயர்களை குறிப்பிட்டு அப்பள்ளிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாக நேற்று மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மோப்ப நாய்கள் உதவியுடனும், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சென்னை காவல்துறையினர் சோதனை நடத்தினர். காவல்துறை சோதனையை அடுத்து பள்ளி நிர்வாகங்கள் சார்பில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு சம்பவம் தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு மாணவர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. அந்த மர்ம நபர் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக, உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இண்டர்போல் அமைப்பின் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. மர்ம நபரின் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க சைபர் க்ரைம் போலீசார் முயன்று வரும் நிலையில், வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது தமிழக காவல்துறை.