பரபரப்பு: வெளியானது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகள்.! 20 குழுக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு காவல்துறை அதிரடி.!
புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவிப்பை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டு இருக்கிறது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய அறிக்கையும் வெளியாகி இருக்கிறது.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க நகரம் முழுவதும் 15,000 காவலர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்து இருக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுமதிக்கப்பட்ட அரங்கத்தில் தான் நடத்த வேண்டும் எனவும் காவல்துறை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நீச்சல் குளங்களின் மீதோ அல்லது நீச்சல் குளங்களுக்கு அருகிலோ விழா மேடைகளை அமைக்க கூடாது எனவும் தெரிவித்திருக்கிறது.
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு பெண் காவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. டிசம்பர் 31ம் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் காலை வரை சென்னையின் 400 இடங்களில் வாகன சோதனை மையங்களும் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பைக் ரேஸ் நடப்பதை கண்காணிப்பதற்கு 20 கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டு இருக்கின்றன. காவல்துறையின் விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.