’மிக்ஜாம்’ புயலால் முடங்கிப்போன சென்னை..!! என்னென்ன சேவைகள் ரத்து..?
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கியமான சேவைகள், வசதிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் சென்னையை அப்படியே முடக்கி போட்டுள்ளது. புயல் காரணமாக என்னென்ன சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம்.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின் தடை செய்யப்பட்டு உள்ளது. தரைக்கு கீழே மின் கம்பிகள் செல்லும் இடங்களில் மின் தடை இல்லை. முக்கியமாக வடபழனி, வளசரவாக்கம் பகுதிகளில் கனமழை காரணமாக மின் தடை செய்யப்பட்டு உள்ளது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இதுவரை 14 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக 15 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. கணேசபுரம், கொங்கு ரெட்டி, பெரம்பூர், வில்லிவாக்கம், ரங்கராஜபுரம், அரங்கநாதன் ஆகிய முக்கிய சுரங்க பாதைகள் மூடப்பட்டு உள்ளன.
சென்னையில் ஒரு சில இடங்களில் பேருந்துகள் இயங்கினாலும் தற்காலிகமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. புயலின் வேகம் குறைந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றி 4 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயில் நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஆலந்தூர் ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேபோல் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.