For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சவுக்கு சங்கர் கைது... குரல் கொடுத்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்...!

06:20 AM May 07, 2024 IST | Vignesh
சவுக்கு சங்கர் கைது    குரல் கொடுத்த பாஜக எம் எல் ஏ வானதி சீனிவாசன்
Advertisement

சவுக்கு சங்கர் கைது நடவடிக்கைக்கு பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும். உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், ‘கவுரி லங்கேஷ், கல்புர்கி, போன்ற பத்திரிகையாளர்களின் கொலைகள், சித்திக் கப்பன், ராணா அய்யூப், போன்ற பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் என அதிகாரத்துக்கு எதிராக உண்மையை பேசத்துணிந்தவர்கள் பலரும், பாஜக ஆட்சியில் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். பத்திரிகையாளர்கள் அச்சமின்றி, அடக்குமுறை தணிக்கையின்றி பணியாற்றுவதை உறுதிப்படுத்துவோம்’ என்று கூறியுள்ளார்.

Advertisement

மனசாட்சி இருந்தால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற செய்தியை வெளியிட்டிருக்க மாட்டார். ஏனெனில், கடந்த 2021 மே 7-ம் தேதி திமுக அரசு பொறுப்பேற்றது முதல், திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகளையும் விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

சவுக்கு சங்கர் திமுகவை விட பாஜகவை மிக மிக கடுமையாக விமர்சிப்பவர். பாஜக தலைவர்களைப் பற்றி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தபோதும் அதை ஜனநாயக வழியிலேயே பாஜக எதிர்கொண்டு வருகிறது. ஆனால், சவுக்கு சங்கர் திமுகவை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்ததும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பெண்களை குறிப்பாக அரசியலில் இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசுவது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஆனால், திமுக அரசை தொடர்ச்சியாக விமர்சிப்பவர்கள் மட்டும் கைது செய்யப்படுகின்றனர்.

பத்திரிகை சுதந்திரம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு கொஞ்சமும் கூச்சமாக இல்லையா. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பத்திரிகை சுதந்திர தின செய்தியை கண்ணாடி முன் நின்று அவர் திரும்ப திரும்ப படித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதாவது அவர் தனது அடக்குமுறை செயல்பாடுகளை கைவிட்டு, ஜனநாயக வழிக்கு திரும்ப வாய்ப்புள்ளதா என்று பார்ப்போம். அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் திமுக அரசின் அடக்குமுறைக்கு வலுவான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement