சேஸிங் கிங் விராட் கோலி பிறந்தநாள்!… சதங்களை குவிக்கும் சாதனை நாயகனின் சிறப்பு தொகுப்பு!
சர்வதேச கிரிக்கெட் உலகில் அரசன் என்று ரசிகர்களால் போற்றப்படும் விராட் கோலியின் 35வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
காலாவதியாகி விட்டார் என்று விமர்சிக்கப்பட்ட பலர் அப்படியே காணாமலேயே போயிருக்கிறார்கள். விராட் கோலியும் அப்படி விமர்சிக்கப்பட்டார். 360 டிகிரி மைதானத்தைச் சுற்றி அடிக்கும் புதியவகை கிரிக்கெட் உலகில் அவருக்கு இடமில்லை என்றார்கள். எதற்காக இந்த அணியில் இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்கள். இப்போதும் அவர் 360 டிகிரி சுழன்று அடிப்பதில்லை. ஆனால் அவர் காணாமலும் போகவில்லை. விமர்சனம் அவரைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. ஆனால் வீழ்த்தி விடவில்லை. ஏனென்றால் அவர் விராட் கோலி!
டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி, இந்திய U-19 அணி உலகக் கோப்பை வென்றபோது, அந்த அணிக்கு கேப்டனாக இருந்தவர். தொடர்ந்து ரன்களை குவித்து வந்ததால், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்காக விளையாடியபோதே கோலி பிரபலமான வீரராக இருந்தார். இதனால், உடனே இந்திய அணியில் இடம் கிடைத்தது. 2008-ல் ஐபிஎல் தொடங்கியபோது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட துவங்கினார். இந்நிலையில் 2012-ல் அவருக்கு கேப்டன் பதவி கிடைத்தது. இந்த வருடத்துடன் அப்பதவியிலிருந்து விலகிவிட்டார். இவர் கிரிக்கெட் உலகில் பல முறியடிக்க முடியாத சாதனைகளை படைத்து ரன் மிஷின் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.
2008ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப் பயணத்தில் இந்திய அணி பங்கேற்றபோது விராட் கோலி 12ஆவது வீரராக சேர்க்கப்பட்டிருந்தார். XI அணியில் இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு காயம் ஏற்பட்டதும், விராட் கோலி களமிறக்கப்பட்டார். இதுதான் விராட் கோலிக்கு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். அதன்பிறகு விராட் கோலி, தொடர்ந்து ரன்களை குவித்து கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
2012ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்தியா, இலங்கை அணிகள் பங்கேற்றன. அப்போது இலங்கைக்கு எதிரான போட்டியில் 40 ஓவர்களில் 320 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அந்த சமயத்தில் விராட் கோலி களிமறங்கி காட்டடி அடித்து, 86 பந்துகளில் 133 ரன்கள் சேர்த்தார். இலங்கை பௌலர்களால் கோலியை ஒரு இடத்தில்கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் இந்தியா நம்ப முடியாத வெற்றியைப் பெற்றது.
முதல் சதத்தையே சேஸிங்கில் தொடங்கிய விராட் கோலி, 2012 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கடின இலக்கை விரட்டியபோது 183 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்காக நெருக்கடியான சூழல்களை எல்லாம் சமாளித்து அபாரமாக ஆடி, பல கடினமான/சவாலான இலக்குகளை எல்லாம் விரட்டி சேஸிங் மாஸ்டராக உருவெடுத்தார் கோலி.
2014-2017 காலக்கட்டத்தில் தனது உச்சகட்ட ஃபார்மில் திகழ்ந்த விராட் கோலி ஏராளமான சதங்களை குவித்து ரன் மெஷின் என பெயர் பெற்றார். இந்திய அணியில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த கோலி, 2014ம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்றார். 2017ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சியையும் ஏற்று, தோனிக்கே கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தினார்.
2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல், 2019 ஒருநாள் உலக கோப்பை அரையிறுதி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்ததால், ஐசிசி டிராபியை வெல்லாத கேப்டன் என்ற விமர்சனத்தை சுமந்தாலும், தன்னம்பிக்கையுடன் இந்திய அணியை வழிநடத்திவந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்த விராட் கோலி, இந்திய அணி 2-3 ஆண்டுகளுக்கு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை நம்பர் 1 இடத்தில் வைத்திருந்தார். ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கோப்பை 2021 க்குப் பிறகு இந்திய அணியின் டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலக விராட் முடிவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்தாலும், ஐசிசி டிராபியை ஜெயிக்காதது அவர் மீதான பெரும் விமர்சனமாக நீடிக்கிறது. ஐபிஎல்லிலும் 2013ம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துவந்த கோலி, அந்த அணிக்கு ஒருமுறை கூட கோப்பையை வென்று கொடுக்கவில்லை. இதுவே அவருக்கு பெரும் நெருக்கடியாக உருவெடுத்தது.
களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அவரது உணர்ச்சிப் பெருக்கு பலரைக் காயப்படுத்தியிருக்கலாம். விமர்சனங்களுக்கும் காரணமாக அமைந்திருக்கலாம். அணித் தலைவர் என்ற பதவியையே பறித்திருக்கலாம். இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட் உலகில் அரசன் என்று ரசிகர்களால் போற்றப்படும் விராட் கோலியின் 35 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதே நாளில் இந்திய அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கியமான லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்த பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தி முதலிடத்தில் நிறைவு செய்யுமா என்பதைத்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலியின் இன்றைய பிறந்த நாளில் அவர் ஏதேனும் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விராட் கோலி பிறந்த நாளை உற்சாக கொண்டாடும் வகையில் கொல்கத்தாவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு விராட் கோலிக்கு கேக் வெட்டி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் பார்வையாளர்களுக்கு விராட் கோலியின் முகமூடியை வழங்குவது போன்ற பல கோலாகல ஏற்பாட்டுக்கு பெங்கால் கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதம் அடித்து இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இன்னும் ஒரு சதம் அடித்தால் சச்சினின் சாதனையை அவர் சமன் செய்து விடுவார்.
இதன் காரணமாக பிறந்தநாள் அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதேபோன்று பிறந்த நாளன்று சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் ,வினோத் காம்ப்ளி ஆகியோர் தான் இருக்கிறார்கள். இந்த பட்டியலில் மூன்றாவதாக இணைய விராட் கோலிக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. உலக அளவில் இந்த பட்டியலில் மொத்தம் 12 வீரர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் விராட் கோலி இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.