கவனம்...! TNPSC குரூப் 2 தேர்வு விதிகளில் மாற்றம்...! இந்த தவறை மட்டும் செய்யாதீங்க...? முழு விவரம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட உள்ளது.
உதவி தொழிலாளர் ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட பதவிகளில் 507 காலியிடங்கள் குரூப்-2 தேர்வு வாயிலாகவும், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், வணிகவரி உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளில் 1,820 காலியிடங்கள் குரூப்-2-ஏ தேர்வு வாயிலாகவும் (மொத்தம் 2,327) நிரப்பப்பட உள்ளன.
இதற்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செய்ய ஜூலை 19-ம் தேதி முடிவடைகிறது. முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வில், 'ஒரு காலியிடத்துக்கு 10 பேர்' என்ற விகிதாச்சார அடிப்படையில் மெயின் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர். மெயின் தேர்வு குரூப்-2 பணிகளுக்கு தனியாகவும், குரூப்-2-ஏ பதவிகளுக்கு தனியாகவும் நடத்தப்படும். தகுதியுள்ள பட்டதாரிகள் தேர்வாணையத்தின் இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஜூலை மாதம் 19-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு விதியில் மாற்றம்:
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நிலையில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட உள்ளது. குரூப் 4 தேர்வில் இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் குருப் 2 தேர்வில் இதே முறை பயன்படுத்தப்பட உள்ளது. இந்த முறைப்படி ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து பின்னர் ஷீட்டில் அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலை தேர்வு செய்ய கூடாது. அப்படி குறித்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும். ஓஎம்ஆர் தாளில் எது சரியான விடையோ அதை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.