தமிழகமே... இனி மின் கட்டணம் கணக்கு எடுக்கும் முறையில் மாற்றம்..! அதிகாரிகள் அதிரடி...
ஒரே வீட்டுக்கு அல்லது தொழில் நிறுவனத்துக்கு இரண்டு இணைப்புகள் இருந்தால், அதை ஒரே இணைப்பாக ஒருங்கிணைத்து ஒரே கட்டணமாக கணக்கீடு செய்ய புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அண்ணாமலை குற்றச்சாட்டு:
ஒரு வீட்டில் அல்லது நிறுவனத்தில், இரண்டு மின் இணைப்புகள் இருந்தால், ஒருங்கிணைந்த இணைப்பாகக் கருதி, மின் கட்டணத்தைக் கணக்கிடும் முறை, இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இந்த முறையில், வாடகைக்குக் குடியிருப்போர்களுக்கு எப்படி மின்கட்டணம் கணக்கிடப்படும் என்ற தெளிவு இல்லை. மேலும், இரண்டு மின் இணைப்புகள் என்பது, பெயர் அடிப்படையிலா அல்லது முகவரியின் அடிப்படையிலா, எதன் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது என்பதற்கான விளக்கமும் இல்லை. இதனால், வாடகைக்குக் குடியிருப்பவர்கள், 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்த நேரிடுமோ என்ற கேள்வி எழுகிறது.
மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கிடப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, மூன்று ஆண்டுகள் கடந்தும், அதனை நிறைவேற்றாமல், பொதுமக்கள் மீது புதிய கட்டணச் சுமைகளைச் சுமத்துவதிலேயே குறியாக இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்படுவதால், ஏற்கனவே 50% அதிகமாக மின்கட்டணம் செலுத்திக் கொண்டிருக்கும் பொதுமக்கள், தற்போது இந்த புதிய நடைமுறையில் உள்ள தெளிவின்மை காரணமாக, மேலும் மின்கட்டண உயர்வுக்கு ஆளாக நேரிடுமோ என்ற குழப்பத்தில் உள்ளனர். இதனைத் தெளிவுபடுத்துவது தமிழக அரசின் கடமை என தெரிவித்து இருந்தார்.
தமிழக மின் வாரியம்:
தமிழக மின்வாரியத்தில் ஏற்பட்டு வரும் தேவையற்ற மின் இழப்புகளைத் தடுக்க ஒரே வீட்டுக்கு இரண்டு மின் இணைப்பு இருந்தால், அதை கணக்கீடு செய்வதில் மின்வாரியம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு வீடு அல்லது வா்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாக கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த நடைமுறை இந்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கான மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது ; மின்வாரியத்தில் ஏற்படும் தேவையில்லாத மின்இழப்புகளை சரிசெய்யும் வகையில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது, ஒவ்வொரு வீட்டு இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேநேரம் ஒரு வீட்டுக்கு இரு இணைப்புகள் பெற்றிருந்தால், தலா 100 யூனிட் இலவசமாக கிடைக்கும். அதேபோல், ஒரே வணிக கட்டடங்களுக்கு இரு இணைப்புகள் இருக்கும்போது மின் கட்டணமும் குறைவாக வரும் என்றனர்.
இதனால், மின்வாரியத்துக்கு அதிக அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. இதனால், இத்தகைய இணைப்புகளைக் கண்டறிந்து ஒரே இணைப்பாக ஒருங்கிணைத்து மின்கட்டணம் கணக்கிடப்படும். ஒரே வீட்டுக்கு இரு மின் இணைப்புகள் இருந்தால், இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மட்டுமே கழித்து, மற்ற யூனிட்களுக்கு கட்டணம் கணக்கிடப்படும். கடைகளுக்கும், இரு மீட்டரில் உள்ள யூனிட்டுகளை கணக்கிட்டு, மொத்தமாக மின் கட்டணம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர் .