மக்களே பாதுகாப்பா இருங்க..!! மீண்டும் சீண்டிப் பார்க்கும் வைரஸ்..!! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!
இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் மீண்டும் பரவிவரும் நிலையில், உலக மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
உலக நாடுகளில் குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வருவதாக கூறி, சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போது தான் மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் செய்து வருகின்றன. இந்நிலையில், தற்போது சண்டிபுரா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் சண்டிபுரா கிராமத்தில் 1965ஆம் ஆண்டு முதல்முறையாக இந்த தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்று கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் 245 பேருக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 64 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, மணல் ஈக்கள் (Sandflies) மூலம் மழைக்காலங்களில் பரவும் இந்த வைரஸ், இந்தியாவில் வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சண்டிபுரா வைரஸ் பரவலை தடுக்க இதுவரை முறையான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது சண்டிபுரா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் 42 மாவட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் அல்லது நரம்பு மண்டல பாதிப்பு இருந்தால் மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
இந்த வைரஸ் பாதித்தால் காய்ச்சல், வாந்தி, நரம்பியல் குறைபாடுகள், மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். பெரும்பாலும் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் உயிரிழக்கின்றனர். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மக்கள் சிகிச்சை பெற வேண்டும்” என்று எச்சரித்துள்ளது.
Read More : ’பூமி மட்டுமல்ல இந்த கிரகத்திலும் மனிதர்கள் வாழலாம்’..!! விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு..!!